மலர்மிசை ஏகினான்
திருக்குறள்
தமிழில் தோன்றிய அனைத்து வகைப்பட்ட நூற்களில் தலையாய இடத்தில் வைத்து எண்ணப்படுவது திருக்குறளாம். இது குறள் வெண்பாவினால் எழுதப்பட்ட நூல். இந்நூல் சங்கம் மருவிய காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் “பதிண்ணென் கீழ்க்கணக்கு” நூற்களில் ஒன்று. இவர் சமயம் பற்றி நிறையக் கருத்துக்கள் கூறப்படுகின்றன. எனினும், திருக்குறளை உரிமை கோருவதில் மூன்று சமயங்களான சமணம், பெளத்தம் மற்றும் சைவம் ஆகிய முன்னிலை வகிக்கின்றன.
கடவுள் வாழ்த்து
இந்நூலின் ஆசிரியர் சமயம் பற்றி அறிய இந்நூலில் அமைந்துள்ள கடவுள் வாழ்த்து அதிகாரம் துணைப்புரிகிறது. கடவுள் வாழ்த்தில் மொத்தம் பத்துப் பாடல்கள். அந்த பத்துப் பாடல்களில் இங்கு ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு இங்கு ஆராய்வோம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் இல்லையா!
திருக்குறள் சமயம்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் - திருக்குறள் (3)
முதலில் மேல் கூறிய குறளுக்கு முதலில் உரையாசிரியர்கள் என்ன பொருள் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
மணக்குடவர் உரை:
மலரின் மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார்.
“நிலம்” என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின் கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார். முற்படக் போகநுகர்வாரென்று கூறினர்.
பரிமேலழகர் உரை:
மலர்மிசை ஏனினான் மாண் அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடு வாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார்.
அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைத்த வடிவோடு விரைந்து சேறலின், “ஏகினான்” என இறந்த காலத்தால் கூறினார்.
அவர் மேலும் விரித்து, இதனைப் பூ மேல் நடந்தான்” என்பதோர் பெயர் பற்றிப் பிறிதொரு கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்.
மேற்கூறிய உரைகளை கூர்ந்து நோக்கும்போது இரண்டு உரையாசிரியர்களும் தங்கள் உரைகளில் ஒன்றுப்படுகிறார்கள். ஆனால், தங்கள் விரிவுரையில் முற்றிலும் வேறுபடுகிறார்கள். மணக்குடவர் உரையிலும், விரிவுரையிலும் தெளிவும், நேரிதின் பொருள் வருமாறும் உரை வகுத்திருக்கிறார். ஆனால், பரிமேலழகரோ தன் விரிவுரையில் நூல் ஆசிரியரிடம் இருந்து முற்றும் வேறுபடுகிறார். எங்ஙனமெனில், அவற்றை ஈண்டு விளக்குவோம்.
“மலர்மிசை ஏகினான்” என்பதற்கு “ மலரின்கண்ணே சென்றவன்” அல்லது “மலர் மேல் நடந்தவன்” என்பதுதான் நேரிடையான பொருள். இதில் இரண்டு உரையாசிரியர்களும் உடன்படுகிறார்கள். ஆனால், விரிவுரையில் பரிமேலழகர் தன்னுடைய உரையிலிருந்தே முரண்படுகிறார்.
“மலர்மிசை ஏகினான்” என்பதற்கு வலிந்து மலரை மனதிற்கு உருவகப்படுத்தி, அன்பால் நினைத்தவர்களின் உள்ளக் கமலத்தின்கண்ணே தோன்றுவான் என்று பொருள் கூறுகிறார். இது பொருந்தாது. என்னை?
மலர்மிசை ஏகினான் என்பதற்கு நேரிடையான பொருள் இருக்க ஏன் உள்ளக் கமலத்தை உருவகிக்க வேண்டும். இங்குதான், பரிமேலழகரின் உள்ள கிடக்கை வெளிப்படுகிறது. எங்கே இந்த உரை பிறிதொரு கடவுளைக் குறிக்குமோ என்று வலிந்துப் பொருள் கூறி பின்வந்த எல்லோரையும் மயக்கம் படச் செய்திருக்கிறார்.
இங்கு பரிமேலழகரை குறை சொல்ல வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை. உரையாசிரியர்களிடம் மிகவும் முக்கியமாக இருக்கவேண்டியத் தகுதி, காய்தல் உவத்தல் அகற்றி உண்மையான உரை வகுக்கவேண்டும் என்பதுதான். ஆனால், பரிமேலழகர் தான் சார்ந்த சமயத்தின்பார் மிக பற்று கொண்டு, உண்மை உரைக்காமல், வலிந்து உரை வகுத்திருக்கிறார்.
இங்கு ஒன்றைக் குறிக்க நினைக்கிறேன். கடவுள் பக்தனின் உள்ளத் தாமரையில் அமர்ந்திருப்பவனேயன்றி நடப்பவன் அல்ல. தமிழ் நல்நெஞ்சங்கள் இந்த உண்மையை மனதிற்கொண்டு மறுபடியும் அக்குறளைப் படிக்குமாறுக் வேண்டிக்கொள்கிறேன்.
“மலர்மிசை அமர்ந்தானது” என்று குறள் இருந்திருக்குமானால், பரிமேலழகர் தன் விரிவுரையில் கையாண்ட உருவகம் நன்று அமைந்திருக்கும். நாமும் இந்தக் கட்டிரையை எழுதியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
அருகன்
சரி. பரிமேலழகர் தன் விரிவுரையில் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பிறிதொரு கடவுள் யார்?. அவைகளை ஈண்டு விளக்குவோம்.
அந்த பிறிதொரு கடவுள் - சமண கடவுளான அருகன் தான் அவர். ஏன் அத்தொடர் மற்ற சமயக் கடவுளரைக் குறிக்காதா? எனில், குறிக்காது! அதற்கு இலக்கிய சான்றுகள் அரண் செய்யவில்லை.
என்செய்ய?
அப்படியானால், அத்தொடர் அருகனை குறிப்பதற்கு இலக்கியச் சான்றுகள் இருக்கின்றனவா? இருக்கிறது! நிறைய இருக்கிறது!!
அவற்றையும் ஈண்டு குறிப்போம்.
இலக்கிய முதன்மைச் சான்றுகள்
ஒன்று:
குறள் தோன்றிய காலத்திற்கு சற்று பின்னே தோன்றியதாகக் கருதப்படும் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், நாடுகாண் காதையில்,
“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது” - நாடுகாண் காதை (200 - 205)
இங்கு ஒன்றை நினைவுப் படுத்த விரும்புகிறேன். அஃதாவது, இளங்கோவடிகள் தம் சிலப்பதிகாரத்தில் பல சமயக் கடவுளர்களைப் போற்றிப் பாடியிருக்கிறார். ஆனால், மலர்மிசை நடந்தான் என்ற சொற்றொடரை அருகக் கடவுளை தவிர வேறொரு கடவுளருக்கு பயன்படுத்தினாரில்லை. இது இலக்கியச் சான்றுகளில் முதன்மையுடைத்து என்பதில் ஐயமுண்டோ?
இரண்டு:
ஐச்சிறுங்காப்பியங்களில் முதலாக வைத்து எண்னப்படுவது “சூளாமணி” என்னும் நூலாம். இது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றென வைத்திருக்க வேண்டியத் தகுதி இதற்குண்டு. தமிழில் தோன்றிய எல்லா காப்பியங்களிலும் மிக சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்டது இந்நூல். எனக்கு மிகவும் பிடித்த நூற்களில் இதுவும் ஒன்று. இந்நூலிலிருந்தும் சான்றுத் தருவோம்.
இரதநூபுரச் சருக்கத்தில்,
“விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரையணிந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
உண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காதலொழி யோமே” - 187
என்றும்,
“முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்றாய்
யருகணங்கு யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே” - 188
என்றும்,
“மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே” - 189
என்றும் குறித்திருப்பதைக் காணலாம்.
மூன்று:
அறநெறிச்சாரம் என்ற நூலின்கண் அமைந்த கடவுள் வாழ்த்தில்,
“தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின்
துதித்துஈண்டு அறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து” - (1)
என்று வருவதைக் காணலாம்.
நான்கு:
அவிரோதி ஆழ்வார் அருளிய “திருவெம்பாவை” என்னும் நூலில்,
“வாரணங்கள் கூவ வரிவண்டு இசைபாடப்
பேரிகையுஞ் சங்கும் பிறதூரியமு ழங்கத்
தாரணியும் பிண்டிநிழல் தாமரையின் மீதிருந்த
வீரியனார் பாடலோ வீதிதொறும் கேட்டிலையோ
காரிகையாய் நீஇன்னும் கண்கள் விழித்திலையோ
பாரீச பட்டர்மேல் பாசமும் இத்தனையோ
மாரனொடு காலனை முன்வாரா மலேகாய்ந்த
ஈரேழ் புவிக்கு இறையைப் பாடலோர் எம்பாவாய்” - (9)
என்று வருவதையும் காணலாம்.
ஐந்து:
ஜீவசம்போதனை என்னும் நூலின்கண் அமையப் பெற்ற பாடல்,
“பன்னிரண்டு மாகணமு மேத்தப்பைந் தாமரைடின்
சென்னி மிசைநடந்த சேவடியை - யுன்னியுயி
ரல்லாத அன்னியமே யென்னும் மதிகாரம்
நல்லா யினியுரைப்ப னன்கு” - (185)
என்ற பாடலாலும் இஃது பெறப்படும்.
ஆறு:
“திருப்பாமாலை” என்னும் நூலில், கடவுள் வாழ்த்துப் பாடலில்,
“வாடாத் தாமரை மலர்மிசை யொதுங்கிய சேடுபடு சிறப்பிற் செல்வ! நின் திருத்தடி
வீடுபெறு புண்ணியம் உடையோர்க் அல்லது
கூடா தேத்துதல்! கொடுமைசெய் பல்லுயிர்
நீடுபல திரிதலும் அனந்தங் காலமென” - (1-5)
என்றும்,
“மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குவதும் மகிழ்ந்தே”
என்று வருவதும் நோக்குக.
ஏழு:
உதீசி தேவர் அருளிய திருக்கலம்பகம் என்னும் நூலில்,
“ மயிலாபுரி நின்றவ ரரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவ ரலர்பூவி னடந்தவ
ரயிலார்விழி மென்கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திர னணியாட லுகந்தவர்..” - (74)
என்றும் வருவதைப் பார்க்கவும்.
எட்டு:
தோத்திரத் திரட்டு என்னும் நூலில்,
“தாதார் மலர்மேல் நடந்தானை
தடம்சூழ் இஞ்சி நகரானை
தேதா எனவண்டு இடைபாடும்
செழுந்தண் பிண்டி நிழலானை
காதார் குழைகள் வெரிவீசக்
கனகப் பொற்றோள் கலந்திலங்கப்
போதார் மலர்கொண்டு அர்ச்சிக்கப்
புலராய் வாழி, பொழுதே நீ!” - (6)
என்றும்,
“திருவில் மின்னார் கொலைபொய்யும்
சேரார் ஆதி அந்தமில்லார்
மருவு மரவும் தாதார
மன்னும் மலர்மேல் நடந்தானைப் பொருவில் காற்றில் நின்றிலங்கப்
பொங்கு பூவம் அங்கமுடன்
அருளும் கோல மணியார்தாள்
அணிய விடியாய், பொழுதே நீ!” - (11)
என்று வருவதையும் காணலாம்.
ஒன்பது:
திரு இரட்டைமணி மாலை என்னும் நூலில்,
‘ஆக்கிய தொல்வினையும் ஆகும் வினைப்பயனும்
போக்கினேன் நம்பாற் புகுதாமல் நோக்கருஞ்சீர்
விண்ணவர்தம் கோமான் வெறிமலர் மேல்நடந்த
பண்ணவனைப் பாடிப் பணிந்து” - (1)
என்று வருவதையும் காணலாம்.
பத்து:
நிகண்டு நூற்களில் தலைச்சிறந்ததாகக் கருதப்படும் “சூடாமணி நிகண்டு” அருகனின் பெயர்களைக் கூறும்போது பின்வருமாறு கூறுகிறது!
“அநகன், எண்குணன், நிச்சிந்தன்
அறவாழி வேந்தன் வாமன்
சினன் வரன் உறுவன் சாந்தன்
சினேந்திரன் நீதி நூலின்
முனைவன் மாசேனன் தேவன்
மூவுல குணர்ந்த மூர்த்தி
புனிதன் வென்றோன் விராகன்
பூமிசை நடந்தோன் போதன்..” - (9)
இங்கு ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் உள்ள அனைத்து நிகண்டுகளும், “மலர்மிசை நடந்தவன்” என்று அருகக் கடவுளையும், புத்தபிரானையும் தான் பகர்கின்றன.
இன்னும் நிறையச் சமண நூற்களில் இருந்து சான்றுகள் காட்டமுடியும். சீவக சிந்தாமணி ஒன்றே போதும், நிறைய சான்றுகள் காட்டலாம். விரிவஞ்சி இங்கே விடுத்தனம்.
முடிபு:
முடிபாக, இக்கட்டுரையைப் படித்தவர்களில் சிலருக்கு இன்னும் மனம் ஒப்பாது இருக்கலாம். அவர்களுக்கு நாம் சொல்வது இதுதான்; பக்திக்கு முக்கியம் கொடுத்து வளர்ந்த சமயங்களில் இச்சொல்லாட்சி பயின்று வராமை ஏன்? “மலர்மிசை ஏகினான்” என்ற சொற்றொடரை பொன்னேபோல் போற்றி தத்தமது நூற்களில் பயன்படுத்தாமை ஏன்? போன்ற கேள்விகளை தாங்கள் தங்களுக்குள்ளேயே கேட்டு அதற்கு தக்க பதிலை கண்டு கொள்ளுமாறு சொல்லுதும்.
அருகனுக்கும் புத்தனுக்கும் “மலர்மிசை ஏகினான்” பொருந்தும் என்றாலும், திருக்குறளின் உள்ள அதிகாரத்தை, குறிப்பாக புலால் உண்ணாமை போன்ற அதிகாரத்தை நோக்குங்கால், அச்சொற்றொடர் அருகனையேக் குறிக்கும் எனபதில் ஐயமில்லை. என்னை?
இரா. பானுகுமார்,
சென்னை
Sunday, June 24, 2007
Thursday, June 07, 2007
தொல்காப்பியர்
தொல்காப்பியர்
தமிழில் தோன்றிய இலக்கண நூற்களில் மிக தொன்மை வாய்ந்தது தொல்காப்பியமாம். எனவே செந்தமிழின் முதல் இலக்கண நூல் இது என்பதில் ஐயமில்லை. இதன் ஆசிரியர் தொல்காப்பியர் என்பார். இவர் காலத்தை நிச்சயித்து கூற இயலவில்லை. சில அறிஞர்களின் கருத்துப்படி, இவரின் கால வரையரை கி.மு.3ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 4ஆம் நூற்றாண்டுவரை இருக்கலாம்.
அவருடைய சமயம்
இக்கட்டுரையின் நோக்கம் தொல்காப்பியரின் சமயம் யாது என்பதை அவரின் நூலின் கண்ணே நேரிதின் ஆராய்ந்து கூறுவதுதான். பல அறிஞர்கள் பலவிதமாக கருத்துக்கள் தெரிவித்திருந்தாலும் அவற்றின் வழியே செல்லாமல் என் அறிவிற்கு எட்டியவரை ஆராய முற்பட்டுள்ளேன். இக்கட்டுரையை முடிந்த முடிபாக எண்ணாமல், இதன் கண் கூறப்பட்டுள்ள கருத்துக்களை சீர்த்தூக்கிப் பார்த்து, தக்கவையென்றால் வரவேற்று, முரணெனில் அவைகளைச் சுட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன். அக்கருத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக ஈண்டு பார்ப்போம்.
சமண சமயம் அல்லது சைன சமயம்
ஒரு நூலின் ஆசிரியர் சமயம் அறிய அந்த நூலில் உள்ள கடவுள் வாழ்த்துத்
துணைப் புரியும். காட்டாக, “பல்கலைக் குரிசில் பவணந்தி” என்று போற்றப்பட்ட நன்னூல் ஆசிரியர் தன் நூலின் எழுத்ததிகார தொடக்கத்தில்,
“ பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே”
என்று தொடங்குகிறார். இப்பாடல் சமண கடவுளான அருகனை வணங்குகிறது. ஆகையால், நன்னூல் ஆசிரியர் சமண மதத்தவர் என்பது பெறப்படும். அவ்வாறே, மற்ற நூலின் கண் அமைந்த கடவுள் வாழ்த்தைப் பார்த்து அந்த நூல் எச்சமயம் சார்ந்தது என்பதை எளிதில் உள்ளலாம். இக்கருத்து கடவுள் வாழ்த்துள்ள நூற்களுக்கு பொருந்தும்.
கடவுள் வணக்கம் கூறப்படாத நூற்களுக்கு?
காட்டாக தொல்காப்பிய நூலில் கடவுள் வணக்கம் கூறப்படவில்லை. தமிழுக்கு இலக்கணம் கூற வந்த நூலாசிரியர் கடவுள் வணக்கம் கூறாமற்விட்டார் போலும். (கூறாமல் விட்டாரா? அல்லது பின்னாளில் அழிக்கப்பட்டதா?)
ஒரு நூலில் கடவுள் அல்லது இறை வணக்கம் கூறாமல் விட்டிருந்தால் அந்நூலின் கண் அமைந்த முதன்மைக் கருத்துக்களைக் கொண்டோ, சிறப்புப் பாயிரம் மூலமோ, உரையாசிரியரின் உரை மூலமாகவோ ஒருவாறு அந்நூலின் ஆசிரியர் சமயத்தை நிறுவலாம். இம்முறை சரியானது என்று கூறமுடியாது. பல முரணானக் கருத்துக்கள் அமையக்கூடும். ஆனாலும் வேறு வழியில்லையாதலால், யானும் அம்முறையே மேற்கொள்கிறேன்.
சிறப்புப் பாயிரம்
“வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே”
இப்பாயிரத்தில் ஆசிரியரின் சமயம் பற்றி அறிய “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்ற தொடரும், “பல்புகழ் நிறுத்த படிமையோனே” என்ற தொடரும் வகை செய்கிறது.
“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்பதில் “ஐந்திரம்” என்ற சொல் எதைக் குறிக்கிறது? அதன் பொருள் என்ன?
ஐந்திரம்
ஐந்திரம் பற்றி பலதரப்பட்ட பொருட்கள் கூறப்பட்டாலும், ஐந்திரம் என்பதற்கு தொல்காப்பியத்தின் உள்ள ஆதாரத்தைக் கொண்டு ஆராயப்படவேண்டும். இதை சில அறிஞர்கள் கருத தவறிவிட்டார்கள். அஃதென்ன?
ஐந்திரம் என்பது வடமொழி இலக்கணம் என்றும், அது பாணினியின் இலக்கணத்திற்கும் முந்தயது என்றும் உரைப்பர் சில அறிஞர்கள். இங்கு ஒன்றைக் குறிக்க விரும்புகிறேன். இந்திய வரலாற்றில் எப்படி வைதிகச் சமயங்கள், அவைதிக சமயங்கள் என்று இரண்டு பிரிவு உள்ளனவோ, அப்படி இலக்கிய உலகிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவை இரயில் வண்டியின் தண்டவாளத்தைப் போல. என்றுமே சேராது, ஆனால் அருகருகே பயணிக்கும். அதுப்போல் இலக்கணத்திலுமாம். ஐந்திரக் கோட்பாடு என்பது சமணம் சார்ந்தது. பாணினி என்பது வைதிகம் சார்ந்தது. (ஐந்திரத்திற்கும் முன்னாலேயே “சாகடாயணம்” என்ற சமண இலக்கண நூல் இருந்தது என்பது சமணர்தம் நம்பிக்கை).
மேலும், ஐந்திரம் என்பது இந்திரனால்* எழுதப்பட்ட இலக்கணம் என்பது சமணர்களின் நம்பிக்கம்.
(*சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், காடுகாண் காதை, 155, “கப்பத்து இந்திரன் காட்டிய நூலின்” என்ற வரியை நோக்குக. )
இந்நம்பிக்கையின்படி ஐந்திரம் என்பது இந்திரனால் எழுதப்பட்ட இலக்கண நூல் என்பதாகிறது. இக்கருத்து எனக்கு உடன்பாடன்று. ஐந்திரம் என்பது இங்கு நூலைக் குறிக்கா. “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்ற தொடரில் நிறைந்த என்பது குணத்தைக் குறிக்கவேண்டும் என்பது என் தாழ்மையானக் கருத்து.
எப்படியெனில், ஐந்திரம் என்பது சமண முனிவர்களுக்குரிய உறுதிப்பாடுகளான ஊறன்மை, வாய்மை, களவாமை, மணவாமை, தவம் என்ற ஐந்து சால்புகளைக் குறிக்கும். இந்த ஐந்து பண்புகளால் நிறைந்த தொல்காப்பியன் என்பதைத்தான் அந்த சிறப்புப் பாயிரம் குறிக்கிறது என்பது என் கருத்து.
பேரா.க.நெடுஞ்செழியன் என்பார் ஐந்திரம் என்பது பஞ்ச பூதங்களைக் குறிக்கும் என்பார். உலகாய்தத்தோடு தொடர்புப்படுத்துவார். இதுவும் பொருந்தா. பஞ்ச பூதங்களை உலகாய்த சமயம் மட்டும் போற்றுவதில்லை. பஞ்ச பூதங்களை, பஞ்சஸ்த்திகாயம் என்று சமணமும் போற்றும். ஆதலால், ஐந்திரம் என்பது உலகாய்தத்துக்கும், பூதவியலுக்கும் மட்டும் சொந்தமில்லை என்பதாகிறது.
படிமையோன்
“பல் புகழ் நிறுத்த படிமையோனே” என்ற தொடரில் படிமையோன் என்பதை சிறிது விளக்குவோம்.
படிமையோன் என்பதை தொல்காப்பியத்தின் முதம் உரையாசிரியரான “இளம்பூரணார்” என்ற சமண ஆச்சாரியர் “தவ ஒழுக்கத்தினை உடையோன்” என்று பொருள் கொள்கிறார். இது சமண முனிவர்களின் தவவொழுக்கத்தை கூறும் சமண சொல்லாட்சி. இது சமண சார்புடைத்து. “பிரதிமயோகம்” என்று
அவை சுட்டும். அத்தவத்தை மேற்கொள்ளும் முனிவர்களுக்கு “பிரதான யோகதாரி” என்றும் சுட்டும். தவவொழுக்கத்தில் முற்றியவர்கள் மேற்கொள்ளும் ஒருவகை தவம் அது. அதனால் பல்புகழ் என்பது அத்தவத்தையே குறிக்குமாம்.
நூல் அகச்சான்று 1
தொல்காப்பியர் முதல் நூல் பற்றிச் சொல்ல வரும்போது இவ்வாறு கூறுகிறார்.
“ வினையின் நீங்கி1 விளங்கிய அறிவின்2
முனைவன்3 கண்டது முதல்4நூ லாகும்”
என்றுக் குறிக்கிறார். இத்தொடர்ப் பற்றி பல சமய அறிஞர்கள் பலவாறு எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக சைவர்கள் இத்தொடர் சிவபிரானைக் குறிக்கிறது என்கிறார்கள். இது பொருந்தாது. எவ்வாறெனில், அதை விளக்குவோம்.
வினையின் நீங்கி1 = வினைக்கட்டுகளில் இருந்து விடுப்பட்ட, அஃதாவது, வினைக்கட்டுகளால் சில காலம் உட்பட்டு, பின் அதனில் இருந்து விடுபட்டு,
விளங்கிய அறிவின்2 = அவ்வாறு வினைகளில் இருந்து விடுபட்டதினால் எழுந்த/தோன்றிய ஞானத்தின் (அறிவின்),
முனைவன்3 = முனிவன், ஆசிரியன், முதல்வன்,
கண்டது முதல் நூலாகும்4 = அந்த முனிவனால் எழுதுவிக்கப்பட்டது அல்லது செய்விக்கப்பட்டது முதல் நூலாகும்.
தொகுப்பாக, வினைக்கட்டுகளிலிருந்து விடுப்பட்டதினால் எழுந்த ஞானத்தைக் கொண்டு முதல்வன் எழுதியது முதல் நூல் என்பது மேலே கூறியத் தொடரின் கருத்து.
இக்கருத்து சிவபெருமானுக்கு பொருந்தா. சிவபெருமான் “பிறவா யாக்கை பெரியோன்”. அதனால் வினையின் நீங்க வேண்டா. அதனால் வினையின் நீங்கி விளங்கும் ஞானமும் வேண்டா. மேலும் அவர் நூல் இயற்றினார் என்று சத்தியப் பிரமாணம் இல்லை.
முடிபாக, இத்தொடர் அருகக் கடவுளைக் குறிக்கிறது. எங்ஙனமெனில்?
சமணத்தின் முதல் கடவுளாகப் போற்றப் பெறுபவர் “ஆதிபகவன்” என்றழைக்கப்படும் ரிஷப தேவராவார். இவரே இப்பரதக் கண்டத்தின் முதல் பேரரசரும் ஆவார். இவரே இந்த உலகியல்பை தோற்றுவித்தார். ஆறு தொழில்களைக் கற்பித்தவர். இல்லறம், துறவறம் என்ற பிரித்து மக்களுக்கு அறம் உரைத்தவர். இவரே எண்ணும், எழுத்தும் கற்பித்தவர். இவரே முதல் துறவரசரும் ஆவார்.
இல்லறத்தை நடாத்திக் காட்டி, பின் துறவேற்று, வினைக்கட்டுகளில் இருந்து விடுப்பட்டு வாலறிவு என்னும் கேவல ஞானத்தைப் பெற்றார். கோட்டம் என்று அழைக்கப்படும் ‘சமவசரண”த்தில் அறம் பகர்ந்தார். இவர் அறம் “திவ்விய தொனி”யாக வெளிப்பட்டு, கணதரர்கள் வாயிலாக ஆச்சாரியர்களால் வெளியிடப்பட்டது ஆகமங்களாகும். இவர் முதன் முதல் இலக்கண நூலைச் செய்தருளினார் என்று ஸ்ரீபுராணம் சுட்டும். இதனால், மேலே சொன்ன தொடர் அருகக் கடவுளைக் குறிக்கும் என்பது அங்கை நெல்லிக்கனி.
நூல் அகச்சான்று 2
தொல்காப்பியர், மரபியல் 27-33 ஆம் சூத்திரத்தில் உயிர்களை வகைப்படுத்துகிறார். அச்சூத்திரம் கீழ்வருமாறு.
"ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே".
"புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
நண்டும் தும்பியும் நான்கு அறிவின
வேபிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே".
இவ்வகுப்புச் சமணச் சார்புடையது. நீலகேசி, மேருமந்திரப் புராணம் ஆகிய நூட்களில் இவ்வாறான பகுப்பை நோக்குக.
உயிர்களின் இப்பகுப்பு முறை வைதிக இலக்கியங்களில் கிடையாது. இஃதொன்றே சாலும் தொல்காப்பியர் சமணர் என்று.
நூல் அகச்சான்று 3
தொல்காப்பிய நூன் மரபு 7ஆம் சூத்திரத்தில் இவ்வாறு குறிக்கிறார்.
“கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே”
இவ்வாறு மாத்திரை அளவுகளாக கைநொடித்தலும், கண் இமைத்தலையும் குறிப்பது சமண சமயக் கோட்பாடு. காட்டாக, பட்டாகளங்கர் என்னும் சமணர் தம் “சுப்தானு சுசுநந்தம்” என்னும் கன்னட இலக்கண நூலில் மாத்திரை அளவுகளாக கைநொடித்தலையும், கண்ணிமைத்தலையும் குறித்திருக்கிறார். அதற்கு தம் நூலில் ஒரு பிராகிருத நூலில் இருந்து ஒரு மேற்கோளும் காட்டுகிறார். (வையாபுரியார்). சமணர்கள் தம் நூலிற் கோட்பாடுகளை மேற்கோள்களாகக் காட்டுமிடத்து தம் சமய நூலில் இருந்துதான் சான்று தருவார்கள் என்பதால் இக்கருத்தும் சமணமாம்.
நூல் அகச்சான்று 4
தொல்காப்பியத்தில் வரும் “னகர இறுவாய்”, “பாட்டிடைக் கலந்த பொருள ஆகி பாட்டின் இயல பண்ணத்திய்யே”, “கந்தழி”, “ஊழ்வினைக் கொள்கை”, “காலம் உலகம் உயிரும் உடம்பே”, நிலையாமை கொள்கை” போன்றவற்றைப்
பார்க்கும்போது இவர் நிச்சயம் சமண மதத்தவர் என்பது தெரிகிறது.
1. “னகர இறுவாய்” = ஆண்பாலைத் தொக்கி நின்றது என்பார் இளம்பூரணார். சமணத்தில் (திகம்பர சமணம்) பெண்பாலுக்கு வீடுபேறில்லையாதலால்.
2. “பாட்டிடைக் .... பண்ணத்திய்யே” = பண்ணத்தி என்பது ஒரு வகை செய்யுள். சமணர்கள் இதை அதிகம் கையாண்டிருக்கிறார்கள். மற்ற வைதிகச் சமயத்தார் எடுத்தாண்டதாக தெரியவில்லை.
3. “கந்தழி” = “நிர்கந்தர்” என்பதன் நேரிடையான தமிழ் மொழிப்பெயர்ப்பு.
சமணரே
மேற் சொன்னக் கருத்துக்களை எல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது தொல்காப்பியம் செய்த தொல்காப்பியனார் சமணர் (ஜைனர்) என்பதுப் புலப்படும்.
இரா.பானுகுமார்,
சென்னை.

Thursday, May 31, 2007
தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டு!
சமணரின் தமிழ் தொண்டு!
தமிழ்ச் சமணரின் தமிழ்த் தொண்டு மிக சிறப்புடைத்து. பன்முகப்பட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, தமிழ் மீது சமணர்கள் (சைனர்கள்) காட்டிய அக்கறை மிக பெரியது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் கொண்டு வந்தார்கள். தமிழிலேயே புதியன படைத்தார்கள். அவர்கள் ஆற்றிய தொண்டு நான்கு வகைப்பட்டது.
1. இலக்கணத் தொண்டு
2. இலக்கியத் தொண்டு
3. அற இலக்கியத் தொண்டு
4. உரைத் தொண்டு
என்று உரைப்பார் பேரா. க.ப.அறவாணன் அவர்கள்.
திராவிட மொழியின் அரும் பெருமையை உலகிற்கு எடுத்து இயம்பிய கால்டுவெல் துரை மகனார் தம் நூலில் “சமண சமயம் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கியது, அரசியிலில் அன்று; கல்வித் துறையிலும், அறிவுத் துறையிலுமேயாம். உண்மையில் அவர்கள் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம்” எனப் போற்றியுள்ளார்.
இவர்கள் இவ்வாறு கூற என்ன காரணம்? அதற்கு என்ன ஆதாரம்? அதையும் இங்கு சிறிதுப் பார்ப்போம்.
தமிழ்ச் சமணர்கள் தொடாத இலக்கிய வகைகளே இல்லை எனலாம். கீழ்வருவனவற்றைப் பார்த்தாலே உண்மை விளங்கும்.
சமணர்கள் அருளிய தமிழ் இலக்கியங்கள் : காவியங்கள், புராணங்கள்
1. சிலப்பதிகாரம்
2. சீவகசிந்தாமணி
3. நரி விருத்தம்
4. சூளாமணி
5. பெருங்கதை
6. *வளையாபதி
7. மேருமந்திரபுராணம்
8. *நாரதர் சரிதம்
9. உதயணகுமார காவியம்
10. நாககுமார காவியம்
11. கலிங்கத்துப் பரணி
12. யசோதர காவியம்
13. *இராமகதை (ஜைன இராமாயணம்)
14. *கிளி விருத்தம்
15. *எலி விருத்தம்
16. *இளந்திரையம்
17. *புராண சாகரம்
18. *அமிர்தபதி
19. *மல்லிநாதர் புராணம்
20. *பிங்கல சரிதை
21. *வாமன சரிதை
22. *வர்த்தமானம்
சமணர்கள் அருளிய இலக்கண நூல்கள்:
23. தொல்காப்பியம்
24. நன்னூல்
25. நம்பியகப் பொருள்
26. யாப்பருங்கலம்
27. யாப்பருங்கலக்காரிகை
28. நேமிநாதம்
29. அவிநயம்
30. வெண்பாப்பாட்டியல்
31. *சந்த நூல்
32. *இந்திரகாளியம்
33. *அணியியல்
34. *வாய்ப்பியம்
35. *மொழிவரி
36. *கடியநன்னியம்
37. *காக்கைப்பாடினியம்
38. *சங்கயாப்பு
39. *செய்யுளியல்
40. *நத்தத்தம்
41. *தக்காணியம்
42. *பேரகத்தியம்
சமணர்கள் அருளிய அற நூல்கள்:
43. திருக்குறள்
44. நாலடியார்
45. பழமொழி நானூறு
46. ஏலாதி
47. சிறுபஞ்சமூலம்
48. திணைமாலை நூற்றைம்பது
49. ஆசாரக் கோவை
50. அறநெறிச் சாரம்
51. அருங்கலச் செப்பு
52. ஜீவ சம்போதனை
53. அகத்தில் சூடி
54. நாண்மணிக்கடிகை
55. இன்னா நாற்பது
56. இனியவை நாறபது
57. திரிகடுகம்
58. கல்வி ஒழுக்கம்
சமணர்கள் அருளிய தர்க்க நூல்கள்:
59. நீலகேசி
60. *பிங்கலகேசி
61. *அஞ்சனகேசி
62. தத்துவ தரிசனம்
சமணர்கள் அருளிய இசை நூல்கள்:
63. *பெருங்குருகு
64. *பெருநாரை
65. *செயிற்றியம்
66. *பரதசேனாதிபதியம்
67. *சயந்தம்
68. *இசைத்தமிழ்ச் செய்யுட்கோவை
69. *இசைநுணுக்கம்
70. *சிற்றிசை
71. *பேரிசை
சமணர்கள் அருளிய பிற இலக்கிய வகைகள்: (நிகண்டு, ஓவியம், சோதிடம், பிரபந்தம், சதகம், கணிதம் மற்றும் நாடகம்)
72. திருக்கலம்பகம்
73. தோத்திரத்திரட்டு
74. திருநூற்றந்தாதி
75. திருவெம்பாவை
76. திருப்பாமாலை
77. திருப்புகழ்
78. ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்
79. அப்பாண்டைநாதர் உலா
80. திருமேற்றிசையந்தாதி
81. *தர்மதேவியந்தாதி
82. திருநாதர் குன்றத்துப் பதிகம்
83. மயிலாப்பூர் பத்து
84. திருமயிலைப் பத்து
85. கொங்கு மண்டல சதகம்
86. நேமிநாத சதகம்
87. சூடாமணி நிகண்டு
88. திவாகரம்(சேந்தன் திவாகரம்)
89. பிங்கலாந்தை(பிங்கல நிகண்டு)
90. கெட்டிஎண் சுவடி
91. *கணக்கதிகாரம்
92. நல்லிலக்க வாய்ப்பாடு
93. சிறுகுழி வாய்ப்பாடு
94. *கீழ்வாய் இலக்கம்
95. *பெருக்கல் வாய்ப்பாடு
96. *அவினந்தமாலை
97. ஜினேந்திரமாலை
98. *உள்ளமுடையான்
99. *பார்சுவநாத மாலை
100. *ஓவிய நூல்
101. *கலைகோட்டுத்தண்டம்
102. *அமுதசாகரம்
103. வச்சணந்திமாலை
104. *குணா நூல்
105. *அகத்தியம்
106. *கூத்தநூல் சந்தம்
107. *பத்மாவதிதேவியந்தாதி
* குறியிட்ட நூற்கள் மறைந்தொழிந்தன.
உரையாசிரியர்களின் உரையின் மூலம் அறியப்பட்ட நூற்கள் தான் மேலே
கூறப்பட்டவை. இதில் சில நூற்கள் விடுப்பட்டுள்ளன. நா.கணேசனாரை கேட்டால் இன்னும் தகவல்கள் கொடுப்பார்.
மேற்சொன்ன தகவல்கள் தமிழக அரசால் நடத்தப்பட்டு, வெளியிடப்பட்ட “தமிழரசு” (1.11.1974, தீபாவளி சிறப்பிதழ்) என்னும் பத்திரிகையில் இருந்து எடுத்து இங்கு தரப்பட்டுள்ளன.
இதனால் சமணரின் தமிழ்த் தொண்டு எத்தணை பெரியது, பரந்துப்பட்டது என்பது புலப்படும்.

Wednesday, May 30, 2007
இலங்கையில் சமணம்
இலங்கையில் சமணம்
இலங்கையில் சமணம் இருந்திருக்க முடியுமா? என்ற கேள்விக்கு இரண்டு விதமாக பதில் சொல்கிறார்கள் அறிஞர்கள். ஒன்று இருந்திருக்க முடியாது என்று ஒரு சாராரும், இலங்கையில் இருந்திருக்கிறது என்று மற்றொரு சாராரும் சொல்கிறார்கள். இலங்கையில் இல்லை, இருந்திருக்க முடியாது என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் மிக முக்கியமானது.
அந்த காரணம்தான் என்ன?
சமண முனிவர்கள் கடல் தாண்டக் கூடாது என்பது முனிவிரதங்களில் ஒன்று. சமண முனிவர்கள் தங்கள் கடமைகளில் இதை கண்டிப்பாக கடைப்பிடித்தே ஆகவேண்டும். ஆகையால், இலங்கையில் சமண அறம் பரவியிருக்க முடியாது என்பது அவர்களது வாதம்.
இரண்டாவது காரணம், சமண முனிவர்கள் சமண இல்லறத்தார் (சிராவகர்கள்)இருக்கும் இடங்களுக்குத்தான் செல்வார்களேயன்றி சமண இல்லறத்தார் அல்லாத இடங்களுக்கு அவர்கள் செல்வதில்லை. அவர்களுக்கு ஆகாரம் இல்லறத்தாரைச் சார்ந்தது. சமண இல்லறத்தாரிடம் மட்டுமே அவர்கள் ஆகாரம் உட்கொள்வார்கள். அதுபோலவே இல்லறத்தார் சமண முனிவர்களைச் சார்ந்து தான் வாழ முடியும். அவர்களின் சிறு சிறு விரதங்கள் கூட சமண முனிவர்கள் அனுமதிப் பெற்றே கடைப்பிடிக்க வேண்டும். இதனால், இரண்டு பிரிவனரும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்க முடியும். இதை அறநெறிச்சாரம் என்ற தமிழ் சமண நூல் ஒரு பாடலில் அழகாக சுட்டும்.
இந்தக் காரணங்களினால் தான் சில அறிஞர்கள் அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கூற்றும் உண்மையானது தான். மறுக்க முடியாது! என்னை?
இலங்கையில் இருந்திருக்கிறது!
இப்போது மற்றொரு சாராரின் கருத்தையும் ஈண்டு பார்ப்போம். இலங்கையில் ஒரு காலத்தில் சமணம் நிலைக் கொண்டிருந்தது தான் என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்:
மகாவம்சம் என்ற நூல் பெளத்த நூல். இலங்கையில் வாழ்ந்த பெளத்த அரசர்களின் வரலாற்றை கூறும் நூலது. இந்நூல் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். இந்நூல் வழி சமணம் கி.மு.4ஆம் நூற்றாண்டிலேயே இலங்கையில் இருந்தமை அறியப்படுகிறது. "பாண்டுகாபயன்" என்பவன் கி.மு. 377-307 வரை இலங்கையை ஆண்ட அரசன். இவன் அனுராதபுரம் என்ற புதிய தலைநகரத்தை அமைத்தான். அந்த புதுத் தலை நகரத்தில் சைன முனிவர்களுக்கென்று தனியாகப் பள்ளிகள், கோயில்கள் கட்டித்தர ஆணையிட்டான் என்று அந்த நூல் கூறுகிறது. மேலும் அந்த அரசனின் ஆணையின் பேரில் "நிகந்தமலை" என்ற இடத்தில், 'நிகந்த ஜோதிய", "நிகந்த கும்பண்ட" என்ற சமண முனிவர்களுக்கு தனி தனியே பள்ளிக்கட்டிக் கொடுக்கப்பட்டது. அப்பள்ளிகளுக்கு அந்த அரசனின் பெயரே சூட்டப்பட்டதாக அந்நூல் மேலும் கூறுகிறது.
இவற்றுடன் "ஆசிவகர்களு"க்காகவும் தனியே இடங்களும் கட்டித்தரப்பட்டதாகவும் அது கூறுகிறது.
- Geiger - Mahavamsa, page 97,98,99
(சமணர்கள் என்றால் அது ஆசிவகர்களையும் குறிக்கலாம் தானே என்று சிலஅறிஞர்கள் நினைக்கலாம். நிர்கந்தர்கள் என்பது சைன முனிவர்களையேக் குறிக்கும். நிர்கந்தம், நிர்கந்தர், நிகண்ட, நிகண்டம், நிகண்டவாதிகள் என்பதெல்லாம் சைனத்தையேக் குறிக்கும். மேலும், சமண, ஆசிவக முனிவர்களுக்கென்று தனி தனியே இடங்கள் கட்டித்தரப்பட்டிருப்பதால் "நிகந்த முனிவர்கள்" என்பது சைன முனிவர்களையேக் குறிக்கும் என்பது அங்கை நெல்லிகனி.)
இதற்கு முன்னமே சமணம் இலங்கையில் கால்கொண்டிருந்தது என்பார் D.G.Mahajan. இவர் "Historical References to Jainism in Lanka Dwip, the Ancient Ceylon, in Buddhist Scriptures" என்ற நூலில் அனுராதபுரத்தில் உள்ள "அபயகிரி தூபத்தில்"கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவைகள் இரண்டும் சைன முனிவர்களின் சிலைகள் என்றும், அவற்றில் ஒன்று சிரவணபெளகோலாவில் உள்ள கோமதேசுவரை ஒத்திருக்கிறது என்கிறார்.
என் கருத்து:
இக்காரணங்களால் கி.மு. 4ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே சமணம் இலங்கையில் நிலைக்கொண்டிருந்தது என்பது பெறப்படுகிறது. இந்த இரண்டு கருத்துகளும் சரியே. இலங்கை இந்திய கண்டத்தில் இருந்து தனியே பிரியும் முன்னர் சமணம் அங்கே கால் கொண்டு இருந்திருக்கலாம். அது தனியாக பிரிந்த பிறகு சமண முனிவர்களின் வரத்து அற்று போன படியால், பிற்காலத்தில் இலங்கையில் சமணம் மறைந்திருக்கலாம். தற்போது இலங்கையில் உள்ள சில ஊர்களின் பெயர்களில் சமண சொல்லாட்சியும் இதை உறுதிப்படுத்தும். தற்கால சைவர்கள் முன்னம் சமண சிராவகர்களாக இருந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்பார் மயிலையார்.
அன்புடன்,

Subscribe to:
Posts (Atom)